ரசவாதி கதைச்சுருக்கமும் நுட்பமும் -1
நார்சிசஸ் பற்றிய செவிவழிக் கதை இது. இளைஞன் ஒருவன் தினமும் ஓர் ஏரியின் அருகே மண்டியிட்டு அமர்ந்து அந்த ஏரியின் நேரில் தன்னுடைய சொந்த அழகின் பிம்பத்தை உற்றுப் பார்த்து ரசித்து மகிழ்வதை வழக்கமாகக் கொண்டிருந்தான். தனக்குத் தானே தன்னுடைய அழகால் மிகவும் கவரப்பட்ட அவன் மகிழ்ச்சியில் ஒரு நாள் காலையில் அந்த ஏரிக்குள் விழுந்து மூழ்கி இறந்து போனான். அவ்வாறு அவன் விழுந்த இடத்தில் ஒரு பூ மலர்ந்தது. அது நார்சிசஸ் என்று அழைக்கப்பட்டது. இது செவி வழி கதை. ஆனால், பவுலோ கொயிலோ எழுதிய ரசவாதி என்னும் நாவலில் இதன் முடிவு வேறு விதமாக சித்தரிக்கப்பட்டிருக்கிறது.
நார்சிசஸூம் வனதேவதையும்
அதன் முடிவு பின்வருமாறு அமைந்திருந்தது. நார்சிசஸ் இறந்தபோது வனதேவதை அந்த ஏரியை கண்டுபிடித்து அங்கே வந்து சேருகிறாள். அந்த ஏரி இப்போது கண்ணீரால் நிரம்பிய ஓர் ஏரியாக மாறி இருக்கிறது. ஏனெனில் ஏரி அழுது கொண்டிருந்ததனால் அது உவர்ப்பாக மாறி இருந்தது.
வனதேவதை அந்த ஏரியிடம் "நீ ஏன் அழுகிறாய்?" என்று கேட்டாள்.
அதற்கு அந்த ஏரி "நான் நார்சிசஸுக்காக அழுகிறேன்" என்று பதில் அளித்தது.
அதற்கு வனதேவதை, " நீ அவனுக்காக அழுவதில் ஆச்சரியம் ஏதுமில்லை ஏனெனில் நான் அவனுடைய அழகில் மயங்கி எப்போதும் பின்தொடர்ந்து வந்த போதும் உன்னால் மட்டுமே அவனுடைய அழகை அருகே இருந்து பார்க்க முடிந்தது " என்று சொல்ல..
" அவன் அழகாக இருந்தானா!! என்ன சொல்கிறாய்?" என்று அந்த ஏரி கேட்டது.
இதைக் கேட்டு அந்த வனதேவதை ஆச்சரியத்துடன், "அவனுடைய அழகைப்பற்றி உன்னைவிட அதிகமாக யாருக்கு தெரியும் அவன் தினமும் உன்னுடைய கரையின் மீது மண்டியிட்டு அமர்ந்து தானே தன்னைத் தானே ரசித்து மகிழ்ந்தான். நீ ஏன் அழுகிறாய்?" என்று கேட்டது.
அதற்கு அந்த ஏரி சிறிது நேரம் அமைதியாக இருந்துவிட்டு "அவன் அழகாக இருந்ததை நான் ஒருபோதும் கவனித்ததே இல்லை. அவன் என்னுடைய கரையின் மீது மண்டியிட்டு அமர்ந்த ஒவ்வொரு முறையும் அவனுடைய கண்களில் ஆழங்களில் என் சொந்த அழகின் பிரதிபலிப்பைத் தான் நான் கண்டேன். இனிமேல் அது சாத்தியப்படாது என்பதால் தான் நான் அழுகிறேன்" என்று கூறியது.
Comments
Post a Comment