ரசவாதி கதைச்சுருக்கமும் நுட்பமும் - 2

ஆட்டிடையனாகிய அவன் பெயர் சந்தியாகு. ஸ்பெய்ன் நாட்டைச் சேர்ந்தவன்.அவனுடைய தந்தை, அவன் கிறிஸ்துவ பாதிரியாராக மாற வேண்டும் என்று விரும்பினார். ஆனால், சந்தியாகு உலகின் பல பக்கங்களுக்கும் பயணம் செல்ல விரும்பினான். தந்தையும் அவன் விருப்பத்தை அறிந்து கொண்டு  அவன் போக்கிலேயே விட்டுவிட்டார். பழைய ஸ்பானிய பொற்காசுகள் மூன்றை  முன்பு என்றோ  ஒருநாள் தான் வயல்வெளியில் கண்டெடுத்ததாக கூறி அவற்றை சீதனமாக ஒரு பையில் போட்டு  அவனிடம் கொடுத்து வழி அனுப்பி வைக்கிறார். அதன் பிறகு சந்தியாகு ஆட்டிடையனாக தனது பயணத்தை தொடங்குகிறான். 
 அவன் ஸ்பெயின் நாட்டில் உள்ள ஒரு தேவாலயத்தில் தங்குகின்றான். அன்றைய இரவு ஒரு கனவு இரண்டாவது முறையாக அவனுக்கு வருகிறது. திரும்பத் திரும்ப வரும் அந்த கனவை பற்றி அவன் யோசிக்கிறான். முடிவு பெறாத அல்லது முடிவு தெரியாத கனவு அது. 
 அது குறித்து கனவுகளுக்கு பலன் சொல்லும் ஒரு சூனியக்கார குறத்தியை சந்திக்கிறான். 
 தான் ஒரு புல்வெளியில் இருந்தது போலவும் அப்போது ஒரு சிறுமி அங்கு தோன்றி செம்மறியாடுகளுடன் விளையாடுவது போலவும், திடீரென்று அச்சிறுமி தனது கைகள் இரண்டையும் பிடித்து தன்னை எகிப்திய பிரமிடுகளுக்கு முன்னால் கொண்டு சென்று நிறுத்தியதாகவும் கனவில் கண்டதாக சூனியக்காரக் குறத்தியிடம் தெரிவித்து அந்தக் கனவுக்கான பலன் என்ன, அந்தப் புதையலை தான் அடைய முடியுமா என்றும் கேட்கிறான்.
 அதற்கு அவள், தான் அவனிடம் கூறப்போகின்ற விஷயத்திற்கு கைமாறாக புதையலை அவன் கண்டுபிடித்தால் அந்த புதையலில் இருந்து பத்தில் ஒரு பங்கை தர வேண்டும் என்று  கேட்கின்றாள். சந்தியாகுவும் ஒப்புக் கொள்கின்றான். 
 பின்னர் அவள், அவன் கண்டது பிரபஞ்ச மொழியில் உள்ள ஒரு கனவு, அதை விளக்குவது என்பது கடினமான வேலை என்று கூறிவிட்டு தனது விளக்கமாக, " எகிப்தில் உள்ள பிரமிடுகளுக்கு நீ போக வேண்டும்.. ஏனெனில், ஒரு சின்னப்பெண் கனவில் உனக்கு அவற்றைக் காட்டியிருப்பதால் அந்தப் புதையல் நிச்சயமாக அங்கு இருக்கிறது என்று அர்த்தம்" என்று தெரிவிக்கின்றாள்.
 அதன் பிறகு.. 
ரசவாதி கதைச்சுருக்கமும் நுட்பமும் - 3 என்னும் பதிவில் காண்போம்.
 சிவம் போற்றி 
 சிவ பதம் போற்றி 
 அன்புடன்,
 கம்கோ சித்தர் 




Comments

Popular Posts